ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மருந்து விற்பனை குறித்து முறையான வழிகாட்டுதல் இல்லாததால் மருந்து வாங்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 200 மருந்து குப்பிகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய அளவு மருந்து குப்பிகள் வராத காரணத்தால் முதல்நாளிலேயே பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர்.
அன்றைய தினம் மருந்து வாங்க காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. நேற்றும் மருந்து விற்பனை செய்யப்படாத நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு முதல் மருந்து வாங்கிச் செல்வதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வந்து காத்திருக்கத் தொடங்கினர்.
இதேபோன்று இன்று அதிகாலை முதல் மருந்து வாங்க ஏராளமானோர் வந்தனர். மருந்து வாங்க 1500-க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் மருந்து விற்பனை தொடங்கப்படவில்லை. மேலும் எவ்வளவு பேருக்கு இன்று மருந்து கிடைக்கும்? வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கினால் அவர்களுக்கு ரெம்டெசிவிர் எப்போது கிடைக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பது போன்ற எந்தவிதமான அறிவிப்பும் வழிகாட்டுதலும் இல்லை என்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் தனிமனித இடைவெளி இன்றி நின்று கொண்டிருந்தனர். ஏற்கெனவே கொரோனா தொற்று உள்ளவர்களின் உறவினர்கள் மருந்து வாங்க வந்திருந்த காரணத்தாலும் தனிமனித இடைவெளியும் பின்பற்றாத காரணத்தாலும் மருந்து வாங்க வந்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவியது. இதனால் மாவட்டம் தோறும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.