தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் ஜூன் 22க்குள் தகவல் தெரிவிக்கலாம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்தும், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்கள் ஏதும் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை ஆணையத்தில் ஜூன் 22 க்குள் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அருணா ஜெகதீசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையை வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருநபர் விசாரணை ஆணையமான அருணா ஜெகதீசன் வரும் திங்களன்று ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து தனது விசாரணையை தொடங்கும் அருணா ஜெகதீசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசாரணை செய்யவுள்ளார். இதற்காக விருந்தினர் மாளிகையில் அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு தனது விசாரணை அறிக்கையை 3 மாதத்திற்குள் தமிழக அரசிடம் அவர் தாக்கல் செய்யவுள்ளார்.
திங்கட்கிழமை தனது விசாரணையை அருணா ஜெகதீசன் தொடங்க உள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்தும், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்கள் ஏதும் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை ஆணையத்தில் ஜூன் 22 க்குள் பொதுமக்கள் நேரிலோ, தபாலிலோ தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகிறார்கள். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சித்தரஞ்சன் மோகன்தாஸ் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் இன்று காலை தூத்துக்குடி வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துப்பாக்கிச்சூடு நடந்த இடம், கலவரத்தின்போது எரிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள்.
மேலும் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களையும் அவர்கள் சந்திக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தூத்துக்குடி வந்து இன்று விசாரணை நடத்துகிறது. இன்று தொடங்கி 6 ஆம் தேதி வரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.