சென்னையில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
சென்னை சேலையூர் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மதுபானக் கூடத்தை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 11ஆம் தேதி அங்கு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 70க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களைக் கண்டதும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அருகில் இருந்த மதுபான கூடத்தை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.