பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் அனைத்து போராட்டங்களும் தற்காலிக வாபஸ் பெறுவதாக ஏகனாபுரம் கிராம குடியிருப்பு மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

சென்னை தலைமைச்செயலகத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குழுவினருடன்  அமைச்சர்கள் ஏ.வா.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சென்னைக்கு 2வது சர்வதேச அளவிலான இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் வெளியிட்டார். விமான நிலையம் அமைப்பதற்கு தேவைப்படும் சுமார் 4500ஏக்கர் நிலத்தை பரந்தூர் பகுதியில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட விவசாய  நிலங்களும், சுமார் 1000ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும், மீதமுள்ள நிலங்களில் நீர்நிலைகள் உள்ளன.

விமான நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக இழப்பீட்டு தொகையை தருவதாக அரசு தரப்பில் அறிவித்திருந்தனர்.  ஆனால் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த அன்றிலிருந்தே அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 80 நாட்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 17ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் அன்றைய தினம் 13 கிராமத்தைச் சேர்ந்த மக்களும் பேரணியாக தலைமை செயலகத்தை நோக்கி வர பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து போராட்டக் குழுவுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுச் செயலாளர் சுப்ரமணி,  இந்த பேச்சு வார்த்தையில் பரந்தூர் விமான நிலையத்தை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும்,மாற்று இடத்தை அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் சார்பில் அமைச்சர்களிடம் கூறியதாக தெரிவித்தார். இது குறித்து அமைச்சர்கள் பரிசீலனை செய்து நல்லதொரு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ஏற்கனவே நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், வரும் 17ஆம் தேதி தலைமைச்செயலகத்தை நோக்கி நடத்தயிருந்த பேரணியும் நிறுத்தி வைப்பதாகவும் என்று  தெரிவித்தார். மேலும், விமான நிலையம் ஏற்படுத்துவது தொடர்பாக அரசு மீண்டும் எங்களுக்கு எதிராக அறிக்கை அல்லது செய்தி கொடுத்தால்  மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கைவிடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com