எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது
கோவையில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைடுத்த கோவில்பாளையம் அருகே உள்ளது கொண்டையம் பாளையம் கிராமம். இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி தண்டபாணி (65) என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர், கோவிலின் அருகே விளையாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சார்ந்த 8 வயது சிறுமியை கோவிலின் உள்ளே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்தச் சிறுமிக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அந்தச் சிறுமியை பெற்றோர் மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்த மருத்துவர் குழந்தை பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது தாயிடம் விவரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய், இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரித்ததில், குற்றத்தை உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு கோவில் பூசாரி தண்டபாணியை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் பூசாரி தண்டபாணியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.