இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை
தமிழக அரசு அறிவித்துள்ள ஆவின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் வகைகளின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
இதுவரை 1 லிட்டர் பசும்பால் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையிலும் ஆவின் பாலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற வகை ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு அரை லிட்டர் 17 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 ரூபாய் விலை அதிகரித்து 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் நீல நிற வகை ஆவின் பாலின் அதிக பட்ச விற்பனை விலை 18 ரூபாய் 50 காசில் இருந்து 21 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 1 லிட்டர் 6 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பச்சை நிற வகை ஆவின் பால் அரை லிட்டரின் விலை அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 காசில் இருந்து 22 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விற்பனை விலை 20 ரூபாய் 50 காசில் இருந்து 23 ரூபாய் 50 காசாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் ஆரஞ்சு நிற வகை பாலின் அரை லிட்டர் விலை, அட்டைதாரர்களுக்கு 21 ரூபாய் 50 காசில் இருந்து 24 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விற்பனை விலை 22 ரூபாய் 50 காசில் இருந்து 25 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் மெஜந்தா நிற வகை பாலின் அரை லிட்டர் விலை அட்டைதாரர்களுக்கு 16 ரூபாய் 50 காசில் இருந்து 19 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விற்பனை விலை 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பால் வகைகளும் அட்டைதாரர்களுக்கும், அதிகபட்ச விற்பனைக்கும் அரை லிட்டருக்கு 3 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.