ஆன்லைன் மூலம் புகார் அளித்த முதியவர்; வீட்டிற்கே நேரில் சென்று உதவிய துணை கமிஷனர் - பின்னணி என்ன?

கோயம்பேட்டில் 81 வயது முதியவர், போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வேண்டுமென ஆன்லைன் மூலம் புகார் அளித்த நிலையில், துணை கமிஷனரை நேரடியாக முதியவரின் வீட்டிற்கு அனுப்பி புகார் மனுவை விசாரித்து போலீஸ் கமிஷனர் தீர்த்து வைத்தார்.
radhakrishnan
radhakrishnanpt desk

சென்னை கோயம்பேடு, ஜெயலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் (81), வசந்தி தம்பதியர். இந்நிலையில், இவர்களது மகன் சதீஷ் என்பவர் தங்களை கொடூரமாக நடத்துவதாகவும், இதனால் தனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாவதாகவும் பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை நேரில் சந்தித்து தனது குறைக்கு தீர்வு காண வேண்டுமென ஆன்லைன் மூலம் புகார் அனுப்பி இருந்தார்.

புகார் மனுவை பார்த்த பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் புகார்தாரர் வயதானவர் என்பதால் அவரை நேரில் வர வேண்டாம் எனவும் இதுகுறித்து விசாரிப்பதற்காக கோயம்பேடு துணை கமிஷனர் குமாரை நேரடியாக ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு அனுப்பி புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

sandeep rai rathore
sandeep rai rathorept desk

இதன் பேரில் துணை கமிசனர் குமார் புகார் அளித்திருந்த ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது ராதாகிருஷ்ணன், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பல வருடமாக பழக்கடை நடத்தி வந்த நிலையில், தனது நான்காவது மகன் சதீஷ், அந்த கடையை நடத்தி வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடையின் ஆவணங்களை வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியதாகவும் அதற்கான கடன் தொகை செலுத்த காலதாமதம் ஆனதால் கடையை ஏலம் விடும் நிலைக்கு சென்றுள்ளது.

இதனை அறிந்த ராதாகிருஷ்ணன், மீதம் செலுத்த வேண்டிய ரூ.24 லட்சத்தை மொத்தமாக செலுத்திய நிலையில், அந்த ஆவணங்களை பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து சதீஷ் வாங்காமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கேட்டும் அந்த பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆவணங்களை கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் வங்கி அதிகாரிகளிடம் போலீசார் பேசிய நிலையில், நேற்று வங்கி அதிகாரிகள் ஆவணங்களை நேரடியாக வீட்டிற்கு எடுத்து வந்து போலீசார் முன்னிலையில் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் அளித்த புகாருக்கு போலீசாரை நேரடியாக வீட்டிற்கு அனுப்பி புகாரின் மீது தீர்வு கண்ட கமிஷனருக்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com