பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு செய்தவர்கள் கைது
கொல்லிமலை அருகே பெண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு செய்த 3 பேரை காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குளம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பெயின்டிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் எருமப்பட்டி அடுத்த கஸ்தூரிபட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய 3 பேரும் வேலை செய்து வந்தனர். இவர்கள் மூவருக்கும் விஜயகுமாருக்கும் சம்பளப் பணம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மூவரும் விஜயகுமாருடன் தாகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இவர்கள் வேலைக்கு வராமல் நின்று விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த 3 நபர்களும் வேறு நபரிடம் வேலைக்கு சென்றுள்ளனர். இந்த சூழலில் ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமாரின் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி உள்ளனர். விஜயகுமாரின் மனைவி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் ஆபாச படங்களையும் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய 3 பேரையும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.