காணாமல் போன டம்ளர்கள் : மது அருந்துவதற்காக திருடிச் சென்ற காவலர்கள் !

காணாமல் போன டம்ளர்கள் : மது அருந்துவதற்காக திருடிச் சென்ற காவலர்கள் !

காணாமல் போன டம்ளர்கள் : மது அருந்துவதற்காக திருடிச் சென்ற காவலர்கள் !
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே தண்ணீர்ப்பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளரை காவலர்களே திருடி எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, அப்பகுதி இளைஞர்கள் இணைந்து குடிநீர் பந்தல் அமைத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மக்களுக்கு தண்ணீர், மோர், சர்பத் உள்ளிற்ற பானங்களை சில்வர் டம்ளர் மூலம் மக்களுக்கு வழங்கி வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்கள் காணாமல் போனதால், யார் இந்தச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிந்து ஆதாரப்பூர்வமாக அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதி இளைஞர்கள் தண்ணீர் பந்தலுக்கு முன்பாக சிசிடிவி கேமரா ஒன்றை நேற்று முன் தினம் பொருத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை தண்ணீர்ப் பந்தலில் இருந்த சில்வர் டம்ளர் காணாமல் போனதை அடுத்து சிசிடிவி கேமராவை சோதனை செய்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளரை இருசக்கர வாகனத்தில் வந்து எடுத்து செல்வது, கீரமங்கலம் காவல்நிலையத்தில் பணி புரியும் காவலர் ஒருவரும், ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர் ஒருவரும் என்பது தான்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரித்த போது கீரமங்கலம் காவல் நிலைய காவலர் அயப்பன் மற்றும் ஊர் காவல் படை வீரர் வடிவழகன் ஆகியோர் இரவு நேரங்களில் மேற்பனைக்காடு பகுதிக்கு ரோந்து வரும் போது மது அருந்துவதற்காக தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்களை திருடிச்சென்று இருப்பதும் தெரியவந்தது. இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க மேற்பனைக்காடு கிராம இளைஞர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருடு போவதை கண்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்து பொருத்திய கேமராவில் காவலர்களே அகப்பட்டுக் கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com