முதலில் அரிவாள் வெட்டு, பின்பு தீ வைப்பு ! மனைவியின் கொடூரத்தில் பலியான கணவன்
கமுதி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியே, கணவரை வெட்டி கொலை செய்துவிட்டு தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிவிட்டு தலைமறைவான மனைவியை போலீசார் இன்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழகொடுமலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த போதும்பொன்னு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து கணவர் ஆறுமுகம், மனைவி போதும் பொன்னு இடையே அடிக்கடி குடும்ப தகறாறு ஏற்பட்டு வந்தது. கணவர் ஆறுமுகம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும், மனைவியை அடித்து துன்புறுத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி போதும்பொன்னு கணவன் ஆறுமுகம் மீது மிகவும் வெறுப்பாக இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி போதும் பொன்னு தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்த ஆறுமுகம் அலறி துடித்துள்ளார். மேலும் தனது ஆத்திரம் தீராததால் வீட்டில் உள்ள மண்ணெண்ணெயை கணவர் மீது ஊற்றி பழைய துணிகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை வைத்து தீவைத்து எரித்துள்ளார்.
அப்போது, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனால் சுதாரித்து கொண்ட மனைவி போதும் பொன்னு, தனது கணவர் அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என கூறி கண்ணீர் விட்டு அழுது நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து சுயநினைவிழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டார். இதையறிந்த மனைவி போதும்பொன்னு அங்கிருந்து தலைமறைவானார். இதில் சந்தேகமடைந்த அபிராமம் போலீசார் கீழகொடுமலூர் கிராமத்திற்கு சென்று ஆறுமுகத்தின் வீட்டிற்குள் சோதனை செய்துள்ளனர். அதில், ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி தீ வைத்து கொளுத்தி கொலை செய்தது அவரது மனைவி போதும்பொன்னுதான் என தெரிய வந்தது.
இது குறித்து அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனையை தேடி வந்தனர். இந்நிலையில் போதும்பொன்னுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது பின்பு தெரியவந்துள்ளது. ஆறுமுகம் கொலை நடந்த சில மணி நேரங்களில் போதும்பொன்னுவுடன் தகாத உறவு வைத்திருந்தாக கூறப்படும் வேல்முருகனும் தலைமறைவாகியது போலீஸ்சாரின் விசாரணை தெரியவந்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மனைவி போதும்பொன்னு மற்றும் அவருடன் உறவில் இருந்த வேல்முருகன் இருவரையும் அபிராமம் போலீசார் இன்று கைது செய்து விசாரித்தனர்.
உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் அங்கிருந்து தலைமறைவானதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கொலை செய்த மனைவி மற்றும் கொலைக்கு கூட்டுச்சதி செய்து உடந்தையாக இருந்த வேல்முருகன் ஆகிய இருவரையும் அபிராமம் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

