சாலையில் தவறவிட்ட நகைகள் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளிகள்
சாலையில் தவறவிட்ட தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீப்ரியா. இவர் கடந்த 4-ம் தேதி அவரது மாமியாருடன் அண்ணா சாலை வழியாக ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த நகைகளை, பையோடு தவறவிட்டார். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் நகைப்பை கிடைக்காததால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிபடையில் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் புகார் கொடுத்த நாளிலிருந்து சிசிடிவி கேமரா காட்சியை கொண்டு நகை காணாமல் போன இடத்தில் இருந்து தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அண்ணாசாலை தாராப்பூர் டவர்ஸ் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது அப்பகுதியாக வந்த சரக்கு ஆட்டோவில் இருந்த நபர் கீழே இறங்கி வந்து சாலையில் கிடந்த நகை பையை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இருப்பினும் பின்புறத்தில் ஆட்டோவில் நம்பர் பிளேட் சரியாக இல்லாததால் சுமார் 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆட்டோவில் இருந்த சிறிய வெல்டிங் பதிவை வைத்து அந்த ஆட்டாவை அடையாளம் கண்டனர். மேலும் அந்த ஆட்டோ கொத்தவால் சாவடி பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.இதனையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்தசாரதியை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், நகையை எடுத்து சென்றதை ஒப்புக் கொண்டார். பின் இச்சம்பவத்துக்கு உதவிய வியாசர்பாடியைச் சேர்ந்த கலைசெல்வனை என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 19 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1500யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசனை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார். மேலும் புகார் அளித்த ஸ்ரீப்ரியா மற்றும் அவரது கணவர் சம்பத்குமார் ஆகியோர் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

