பட்டுக்கோட்டை அழகிரி சமாதியின் அவல நிலை: கவனிக்குமா தமிழக அரசு?

பட்டுக்கோட்டை அழகிரி சமாதியின் அவல நிலை: கவனிக்குமா தமிழக அரசு?

பட்டுக்கோட்டை அழகிரி சமாதியின் அவல நிலை: கவனிக்குமா தமிழக அரசு?
Published on

பாழடைந்து கிடக்கும் அழகிரிசாமியின் சமாதியை தமிழ அரசு தூய்மைப்படுத்திப் பராமரிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திராவிட இயக்கத்தின் போர்வாள் என கொண்டாடப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அண்ணாவுக்கு முன்னோடி பேச்சாளர், பகுத்தறிவு பாவலர், அஞ்சாநெஞ்சன் என ஏகப்பட்ட பட்டங்கள் இவருக்கு.

புதுக்கோட்டை பக்கம் கீரமங்கலம் அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் 1900ல் பிறந்தவர் அழகிரிசாமி. முதன்முதலில் சுயமரியாதை சங்கத்தை தொடங்கியவர் அழகிரிதான். அதன் மூலம் பிரச்சாரங்களை நிகழ்த்த தொடங்கினார். இவருக்குப் பிறகே சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னை வரை நடைப் பயணம் மேற்கொண்டார். நடைப்பயண கலாச்சாரத்தை அரசியல் பயன்பாட்டிற்குள் கொண்டு வந்தவர் இவர்தான். அன்று முதல் தனது இறுதி மூச்சு வரை இவரது குரல் மேடைகளில் இடைவிடாமல் ஒலித்தது.

காச நோயினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் திருவாரூர் கூட்ட மேடை ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார். அதை கண்ட மக்கள் கூட்டம் அவரை தாங்கிப் பிடித்து காத்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் ‘காசநோய் பீடித்த நீங்கள் இவ்வளவு ஆவேசமாக பேசலாமா?’என கேள்வி கேட்க ‘என்னை விட நாடு நோயில் கிடக்கிறது. முதலில் அதை சரிப்படுத்தியாக வேண்டும். ஆகவேதான் அப்படி பேசினேன்’என்று பதில் கூறியதைக் கண்டு நடுங்கிப் போனான். அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை. பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்த கருணாநிதிதான். அழகிரியின் மீது கருணாநிதி கொண்ட பற்று காரணமாக தனது மகனுக்கு அழகிரி என பெயரிட்டார்.

காலப்போக்கில் நோயின் தாக்கம் வீரியமடைய 1949 ஆம் ஆண்டு அழகிரி இறந்தார். அவரது இறப்புக்காக கலங்கிபோய் கட்டுரை எழுதினார் பெரியார். இப்படிப்பட்ட திராவிட இயக்க முன்னோடியான அழகிரியின் சமாதி தஞ்சை ராஜாகோரி சுடுகாட்டில் கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. புதர்களும் மண் குவியல்களுமாக கிடக்கும் அந்த சமாதியை காப்பாற்றி அரசு பராமரிக்க வேண்டும் என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய வைகோ ‘நகராட்சி சார்பில் இடத்தை மட்டும் தூய்மை செய்து தாருங்கள். நினைவிடத்தை எங்கள் செலவில் செப்பம் செய்து கொள்கிறோம்’என்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.

“வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளை பார்த்து, எங்கள் மரியாதைக்குரிய வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவி நன்றி செலுத்துவார்கள்” என்று பேசியவர் அழகிரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com