வட்டிக்கு மேல் வட்டி.. கடும்நெருக்கடி கொடுத்த நிதிநிறுவனம் - தொழிலாளி எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரியில் கடன் வசூலுக்கு வந்த நிதி நிறுவனத்தாரின் மிரட்டலுக்கு பயந்து சமையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 'பவ்டா' நிதி நிறுவனத்தில் கொள்ளை வட்டியில் சிக்கி தவிப்பதாகவும் பரவன் காலணி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே பரவன் காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சமையல் தொழிலாளியான இவர், நோய்வாய்பட்ட நிலையில் சமீபகாலமாக வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்ப வறுமையை போக்குவதற்காக இவரது மனைவி முத்துலட்சுமி குளச்சல் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கண்ணன் வீட்டிலேயே இருந்து குழந்தைகளை பராமரித்து வந்தார்.
இந்நிலையில் இக் குடும்பத்தை தேடிச்சென்ற பவ்டா நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறியுள்ளனர். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவித்து வந்த முத்துலட்சுமி குறைந்த வட்டிக்கு கடன் என்பதால் பவ்டா நிறுவனத்திற்குச் சென்று 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதையடுத்து தனக்கு கிடைத்த குறைந்த கூலியைக் கொண்டு குடும்பச் செலவை சமாளித்து பெற்ற கடன் தொகைக்கு சிறிது சிறிதாக பணம் செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து பணம் செலுத்தியும் கொரோனா காலத்தில் கடன் அடையாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் தற்போது அவ்வப்போது வீடு தேடிவந்த நிதி நிறுவன ஊழியர்கள் வாங்கிய கடனுக்கு வட்டியும் அதற்கும் மேலாக கூட்டு வட்டியும் போட்டதாக தெரிகிறது. இதனால் 30 ஆயிரம் வாங்கிய முத்துலட்சுமி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் செலுத்தியும் கடன் தீரவில்லை. மேலும் 5 ஆயிரம் ரூபாய் வட்டி தொகை செலுத்த வேண்டுமென நிதி நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளனர். தன்னால் இயன்றவரை சிறிதுசிறிதாக செலுத்துவதாக முத்துலட்சுமி உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முத்துலட்சுமியின் வீட்டிற்கு வந்த பவ்டா நிறுவனத்தில் ஊழியர்கள், முத்துலட்சுமி செலுத்த வேண்டிய கடன் தொகையை வீட்டிலிருந்த கண்ணனிடம் கேட்டுள்ளனர் அதோடு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் ஏன் கடன் வாங்குகிறீர்கள் என்று கேட்டதோடு முத்துலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி கணவனின் தற்கொலை சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது புலம்பினார். இதுதொடர்பாக மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் பவ்டா நிறுவனத்தினர் தங்களுக்கு கடன் தருவதாக கூறும் போது குறைந்த வட்டி என கூறி பணத்தை தருவதாகவும் அதன் பின்பு கடனை சிறிது சிறிதாக செலுத்தி நிறைவு செய்ய முயற்சித்தாலும் அதிக அளவில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் வசூலிப்பதாகவும் வாகனத்தில் கடன் வசூலிக்க வருபவர்கள் ஆபாச வார்த்தைகளில் பேசி மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் எங்கள் நிறுவனத்தில் முழுமையான தொகையை செலுத்தவில்லை என்றால் வேறு எந்த நிறுவனத்திலும் கடன் பெற முடியாது என மிரட்டுவதால் தங்களுக்கு வட்டி குறித்த கணக்கு பார்க்க தெரியாத நிலையில் பவ்டா நிறுவனம் கேட்கும் பணத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
தற்போது சிறிய அளவிலான தொகைக்காக நிதி நிறுவனம் ஒரு உயிரையே பலி வாங்கியுள்ள நிலையில் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பவ்டா நிதி நிறுவனத்தில் படிப்பறிவே இல்லாத பரவன் காலணியை சேர்ந்த மக்கள் கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பதாகவும் வேதனையுடன் கூறினர்.