சிலை கடத்தல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் உற்சவர் சிலையை செய்த ஸ்தபதி முத்தையாவை கைது செய்தனர். பழனி முருகன் கோயிலின் அப்போதைய இணை ஆணையர் ராஜா மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் தேவேந்திரன், புகழேந்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக உற்சவர் சிலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகம விதிப்படி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட பின்னர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமிடம் உற்சவர் சிலை தரப்பட்டது.