யானையை கண்டு பயந்து மலைச்சரிவில் விழுந்த முதியவர்... ரிங்டோன் சப்தத்தை வைத்து மீட்பு

யானையை கண்டு பயந்து மலைச்சரிவில் விழுந்த முதியவர்... ரிங்டோன் சப்தத்தை வைத்து மீட்பு
யானையை கண்டு பயந்து மலைச்சரிவில் விழுந்த முதியவர்... ரிங்டோன் சப்தத்தை வைத்து மீட்பு

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைச்சரிவில் யானையை பார்த்து பயந்து இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த முதியவர் 12 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் துடுப்பதியைச் சேர்ந்த ரங்கராஜ் (64) என்பவர் சின்னசாலட்டி, பவளக்குட்டை ஆகிய பகுதியில் தோட்டம் வாங்குவதற்கு இடம் பார்ப்பதற்காக தனது நண்பர் நாகராஜ் (60) மற்றும் தண்டபாணி (32) ஆகியோருடன் கடம்பூர் சென்றுள்ளார். அதன் பிறகு கடம்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் ரங்கராஜூம் மற்றொரு இருசக்கர வாகனத்தில் நாகராஜ், தண்டபாணி ஆகியோரும் சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கடம்பூர் மலைப்பாதையில் நாகராஜ் பைக்கை தொடர்ந்து ரங்கராஜ் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபிறகு பின்னால் வந்த ரங்கராஜை காணவில்லை. இதையடுத்து இருவரும் வந்த பாதையில் மீண்டும் சென்று முதியவர் ரங்கராஜை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே 12 மணி நேரத்துக்கு பின் மல்லியம் துர்க்கம் என்ற இடத்தில் முதியவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் ரிங்டோன் சப்தம் கேட்டுள்ளது. உடனே ரிங்டோன் சப்தம் கேட்ட திசையை நோக்கி பார்த்தபோது 50 அடி மலைச்சரிவில் பலத்த காயத்துடன் ரங்கராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மலைச்சரிவில் இறங்கி கயிறு மூலம் அவரை உயிருடன் மீட்டனர்.

இது குறித்து உடன் வந்தவர்களிடம் கேட்டபோது, மலைப்பாதையில் தனியாக வந்த ரங்கராஜ் எதிரே வந்த யானையை பார்த்து பயந்து சாலையோர கிடு கிடு பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்துவிட்டதாக தெரிவித்தனர். 12 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் கிடந்ததால் அவர் மயக்க நிலையில் இருப்பதாகவும் தீவிர சிசிச்சை அளிப்பதாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடம்பூர் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com