தமிழகம் முழுவதும் விடிய விடிய நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
தள்ளுமுள்ளு, வாக்குவாதம், தடியடி என பல்வேறு காட்சிகளை கடந்து, உள்ளாட்சிப் பதவிகளுக்காக பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வானவை தவிர, 73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கின. சில இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.
சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும், முடிவுகள் அறிவிப்பு தொடர்பாகவும் பல இடங்களில் அதிகாரிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தன. அரியலூர் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடியும் நடத்த வேண்டியிருந்தது.
மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய நடைபெற்றது. இப்பணிகள் இன்று மாலை வரை நடத்தப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

