பெண் வாக்காளர்கள் அதிகம், வாக்களித்த பெண்களின் எண்ணிக்கையோ குறைவு - காரணம் என்ன?

பெண் வாக்காளர்கள் அதிகம், வாக்களித்த பெண்களின் எண்ணிக்கையோ குறைவு - காரணம் என்ன?
பெண் வாக்காளர்கள் அதிகம், வாக்களித்த பெண்களின் எண்ணிக்கையோ குறைவு - காரணம் என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் தேர்தலில் வாக்களிக்க பெண்கள் முன் வராதது ஏன் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.  

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகை, பேருந்துகளில் கட்டண சலுகை, சிலிண்டருக்கு மானியம் , வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் , விலையில்லா வாஷிங்மெஷின் என பெண் வாக்காளர்களை கவர தமிழக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தன. இதற்கு 2 காரணங்களை கூறலாம்.

ஒன்று தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மற்றொன்று கடந்த கால தேர்தல்களில் பதிவான வாக்குசதவிகிதம்.

தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு தேர்தல் முதல் பெண் வாக்காளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கிறது. ஆண்களை காட்டிலும் பெண்களே திரளாக வந்து வாக்களித்துள்ளனர். ஆனால் 2021 சட்டமன்ற தேர்தல் அதனை மாற்றி அமைத்திருக்கிறது. 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், பெண்களின் வாக்குசதவிகிதம் 72.41 , ஆண்களின் வாக்குசதவிகிதம் 68.75. 2011ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களின் வாக்கு சதவிகிதம் 78.51, ஆண்களின் வாக்குசதவிகிதம் 77.53. இதுவே 2016 ஆண்டு தேர்தலில் பெண்களின் வாக்குவிகிதம் 74.33 ஆகவும் ஆண்களின் வாக்கு விகிதம் 74.16 என்ற அளவில் இருந்தது. இந்த தேர்தலில் அது சற்றே மாற்றமடைந்துள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்கு விகிதம் 72.54 ஆகவும், ஆண்களின் வாக்கு விகிதம் 73.09 ஆகவும் இருக்கிறது. இம்முறை பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112.

இவர்களில் 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேர் மட்டுமே தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஆனால் மொத்தமுள்ள 3 கோடியே 90 லட்சத்து 23 ஆயிரத்து 651 ஆண் வாக்காளர்களில் 2 கோடியே 26 லட்சத்து 3ஆயிரத்து 156 பேர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெண்களின் வாக்களிப்பு சதவிகிதம் ஆண்களை விட குறைவாக இருக்கிறது. இதுவே பெண்கள் வாக்கு விகிதம் குறையவும் காரணமாக அமைந்திருக்கிறது.

சென்னை மட்டுமென எடுத்து கொண்டால் கூட மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் வாக்கு விகிதத்தை ஆய்வு செய்தால் 13 தொகுதிகளில் ஆண்களே திரளாக வந்து வாக்களித்திருக்கின்றனர்.பெண்கள் மத்தியில் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் குறைந்திருப்பது தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com