இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்கள்: எச்சரித்து அனுப்பிய போலீஸ்

இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்கள்: எச்சரித்து அனுப்பிய போலீஸ்

இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்கள்: எச்சரித்து அனுப்பிய போலீஸ்
Published on

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு முதல் அமலுக்கு வந்தது. இரவில் தேவையின்றி வெளியே வந்தவர்கள், எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இரவு 9 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடைகளை மூடத் தொடங்கினர். திறந்து மூடாமல் இருந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என்பதால், காவல்துறையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்தனர். முதல் நாள் என்பதால், சிலர் இரவு 10 மணிக்குப் பிறகும் வாகனங்களில் செல்வதை காண முடிந்தது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, மக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

சென்னை ஒஎம்ஆர், ஈசிஆர் சாலைகளிலும், இரவு நேர ஊடரங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அத்தியாவசிய பணி மற்றும் மருத்துவ உதவிக்காக செல்வோர் அதற்கான ஆவணங்களை எடுத்துச் சென்றால், அனுமதிக்கப்பட்டனர். இரவு நேர ஊரடங்கால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சேலத்தில் பல இடங்களில் தேவையின்றி வெளியே வந்தவர்கள், எச்சரித்து அனுப்பப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பத்து மணிக்கு முன்னதாக கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டனர். முகக்கவசம் அணியுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தினர்.

இதேபோல் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இரவு நேர ஊரடங்கைத் தொடர்ந்து, காலை 5 மணிக்குப் பிறகு வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com