பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடனான இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடனான இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடனான இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!

அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 53 ஆசிரியர்கள் இதுவரை உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் ஏன்?

இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் குறைத்து வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து 27 ஆம் தேதியிலிருந்து நுங்கம்பாக்கம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதிய குழுவில் மே 2009 முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு வேறு ஒரு அடிப்படை ஊதியமும், 31 மே, 2009 பிறகு பணிக்கு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 3170 குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊதியக்குழு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமே தவிர குறைத்து வழங்கக்கூடாது என விதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு பணியாளர்களுக்கும் மாநிலத்தில் பணி புரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் இணையாக ஊதியம் வழங்காமல் 12 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான சம ஊதியம் என்கின்ற திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்திலிருந்து 38 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 53 இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னை தலைமை செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட், "அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மூன்று நாட்களாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது

சுமார் அரை மணி நேரம் நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கூறுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூறினார். இன்றையப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை” என தெரிவித்தார்.

மேலும், “இடைநிலை ஆசிரியர்கள் குறைவான ஊதியம் பெறுவது 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு தான். ஊதிய முரண்பாடு சரி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தூய்மை பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறினார்.

அதேபோல், 13 ஆண்டுகளாக குறைவான ஊதியத்தை பெற்று வருவதாக கூறிய அவர், இனி இந்த நிலை தொடரக்கூடாது என்றும், ஊதிய முரண்பாடுகளை களையும் வரை போராட்டம் தொடரும் எனவும் உறுதிப்பட கூறினார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com