தி மைலாப்பூர் கிளப் வழக்கு: கடமையை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - நீதிமன்றம்

தி மைலாப்பூர் கிளப் வழக்கு: கடமையை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - நீதிமன்றம்
தி மைலாப்பூர் கிளப் வழக்கு: கடமையை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - நீதிமன்றம்

கோயிலையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2007 முதல் மாத வாடகை இரண்டரை லட்சம் என நிர்ணயித்து, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம் 4.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பேரில் 3 கோடி ரூபாய் அளவிற்கு பாக்கி வைத்திருப்பதாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கோயிலின் இணை ஆணையர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கோயில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு விட வேண்டுமெனவும், அதற்கு மேல் நீட்டிக்க உரிய அனுமதி பெற வேண்டுமென அறநிலையத்துறை சட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அதனடிப்படையில் சந்தை மதிப்பின் வாடகை நிர்ணயிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்ட பிறகு, அந்த கோயிலின் நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் கடைபிடித்து, கோயிலையும் அதன் சொத்துக்களையும் பாதுக்காக்க வேண்டிய கடமை இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல் அறநிலையத்துறை சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், கோயிலுக்கு தானமாக கொடுத்த நன்கொடையாளர்களிடம் கொடுத்த உத்தரவாதத்தை மீறும் செயல் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாப்பூர் கிளப்புக்கு 2016ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்கும் வகையில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது என்பதால், அந்த வாடகையை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த நோட்டீசை ரத்து செய்ய மறுத்து, மயிலாப்பூர் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com