கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே புனலால் பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
கலாமின் அரிய புகைப்படங்கள், அவர் தலைமையில் திட்டமிட்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கட்டின் வடிவங்கள், அவர் பயன்படுத்தியிருந்த பொருட்கள், அவர் எழுதிய வசனங்கள் என அவரைக் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவிலே முதல் முறையாக இந்த மலையோர கிராமத்தில் அமைப்பட்டுள்ள அருங்காட்சியகம் அந்த கிராம மக்களிடையே பெரிய வரவேரற்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களைக் கனவு காணத் தூண்டியவர். இளைஞர்களே நவீன இந்தியாவை வடிக்கும் சிற்பிகள் என்று தீர்க்கமாக நம்பியவர். இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிற்காக கேரளாவில் உருவாகியுள்ள அருங்காட்சியகம், குக்கிராமத்திலிருந்து நாட்டின் உயரிய இடத்திற்கு இளைஞர்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகள், தென் இந்தியாவிலே முதல் முறையாக எங்களது கிராமத்தில் அப்துல் கலாம் அருங்காட்சியகம் தொடங்கியுள்ளதால் அப்துல் கலாமைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது. அவரது வாழ்க்கை குறித்து புத்தகங்களில் மட்டும் படித்து தெரிந்துகொண்டதை இந்த அருங்காட்சியகம் இங்கு திறந்திருப்பதால் அவரது வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் தோற்றமளிக்கிறது.
இளைஞர்களின் கனவு நாயகனாக திகழும் அப்துல் கலாமின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் சிறந்த முன்மாதிரி என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.