ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி, எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பெருந்துறை பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக கொடிவேரி அணைப்பகுதிக்குள் கிணறு வெட்டும் பணி தொடங்கிய நிலையில், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என தடப்பள்ளி, அரக்கண்கோட்டை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், பெருந்துறை, ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களை திரட்டிச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து வரும் சாயக்கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுள்ளதாகவும், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் சிப்காட் தொழிற்சாலையில் அமையவுள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.