கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு 15 ஆயிரம் அபராதம்

கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு 15 ஆயிரம் அபராதம்

கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு 15 ஆயிரம் அபராதம்
Published on

கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "என் தந்தை சாத்தையா சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8 வது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3ம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக வெளியில் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தொலைபேசிக்கு எனது தாய் தொடர்பு கொண்டார். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் என் தந்தையை வைத்திருப்பதாக கூறி இருந்தார்.



மேலும், முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், 6ம் தேதி எனது தந்தையை பொறுப்பேற்க அழைத்து வந்தபோதும் சந்திக்க இயலவில்லை. பதவியேற்பு முடிந்ததும். என் தந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். எனது தந்தையை அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக முதுகுளத்தூர் 8 ஆவது வார்டு கவுன்சிலரை இன்று ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சாத்தையா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்டாரா? என நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், மகனுடன் இருக்க விரும்பாததால், மகள் மற்றும் மருமகனுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், சொந்த பிரச்சனைக்காக நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி, மனுதாரருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com