திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!
கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த 14 நாட்களாக காவல் துறையினர் 18 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இருப்பினும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் நேற்றையதினம் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த அந்த நபரை, கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்துச் சென்று விடிய விடிய 12 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைதான அந்த வடமாநிலத்தவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை கைதான அந்த நபரின் புகைப்படத்தை சிறுமியிடத்தில் காட்டியும் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், விடிய விடிய நடத்திய விசாரணையில், இந்த நபருக்கு இந்தி மட்டுமே தெரியும் எனவும், விடுமுறை நாட்களான சனி , ஞாயிறு ஆகிய நாட்களில் ரயிலில் மட்டுமே அவர் சுற்றித்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமியை தான்தான் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அன்று நடந்த பல்வேறு விஷயங்களையும் கைதான இளைஞர் வாக்குமூலமாக கொடுத்திருப்பதாக போலிஸார் தகவல் அளித்துள்ளனர்.
உடைந்த பற்கள், இடது கையில் டேட்டூ, வலது கையில் பச்சை கயிறு, பான்பராக் போடும் பழக்கம் , உடையில் ரத்த கறையும் என சிறுமி கூறிய அடையாளங்கள் அனைத்தும் அந்த இளைஞரிடம் சரியாக இருந்ததாக போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.