பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனயடுத்து அந்த பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் வன்முறை காரணமாக 275க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை என்பதால் பொன்பரப்பியில் அமைந்துள்ள வாக்குசாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,உரிய ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படியும்,அதை பரிசீலித்து ஏப்ரல் 21க்குள் உரிய முடிவெடுக்கவும்  உத்தரவிட்டனர்.

இந்நிலையில்,தனது கோரிக்கையை பரிசீலித்து எந்த எழுத்துப்பூர்வமான முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என விஷ்ணுராஜின் வழக்கறிஞர் சங்கரசுப்பு இன்று நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டுமென முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடுவது எவ்விதத்தில் சாத்தியம் என கேள்வி எழுப்பினர். மேலும்,மனுதாரர் கோரிக்கையை நிராகரித்தத நீதிபதிகள், தேவைப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்காகவோ அல்லது தேர்தல் வழக்காகவோ தொடரலாம் என அறிவுறுத்தினர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com