ஆன்லைன் விளையாட்டு தடைக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

ஆன்லைன் விளையாட்டு தடைக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
ஆன்லைன் விளையாட்டு தடைக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நவம்பர் 16ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட அனைத்திந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,  ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுவதாகவும், அதற்கு அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் எனக்கூறி  தடை செய்ததை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டே ரத்து செய்த நிலையில், தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள், இதில் திறமையான வீரர்கள்  வெற்றி பெறுவார்கள் என்றும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதுவதாகவும்,  அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற  தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி அமர்வில், விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரர்  தரப்பில் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com