சட்ட விரோத யானைக் காப்பகங்கள் எவை? - அறிக்கை கேட்கும் நீதிமன்றம்
சட்ட விரோதமாக செயல்படும் யானைக் காப்பகங்களை மூடக் கோரிய வழக்கில் தமிழக வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பவுண்டேஷன் இந்தியா மற்றும் வனவிலங்குகள் மீட்பு ஆகிய அமைப்புகள், காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகளை விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் குரும்பரம் யானைகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும், இந்த மூன்று யானைகளுக்கும் எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும், யானைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வெளிநாடுகளில் நன்கொடை கேட்பதாகவும் குற்றம் சாட்டிய மனுதாரர், சட்ட விரோதமாக செயல்படும் காப்பகத்தை மூடவும், யானைகளை மீட்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக நடத்தப்படும் யானைக் காப்பகங்கள் குறித்து மார்ச் 8ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.