தருமபுரி: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி
தருமபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ளது. தருமபுரி - சேலம் செல்லும் மார்க்கத்தில் சாலை வளைவுகளும், தாழ்வான பகுதிகள் நிறைந்ததாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலத்திலிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொப்பூர் பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக வாகனங்கள் வரிசையாக கணவாய் சாலையில் நின்றிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி. கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக விபத்துக்கள் ஏற்படும் தொப்பூர் கணவாய் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தர்மபுரி மக்களவை உறுப்பினர் உள்ளிட்ட பலரும் நேரில் பார்வையிட்டு ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.