”வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386”., சென்னையின் சிறப்பை போற்றும் முதல்வர் ஸ்டாலின் !
சென்னையின் 386-வது தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையின் சிறப்பை எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். சென்னை, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக விளங்குகிறது. இது பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்கி, பெண்களுக்கு முன்னேற்றம் அளித்து, நண்பர்களை உருவாக்கும் நகரமாக திகழ்கிறது.
-சீ.பிரேம்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் 386-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வந்தாரை வாழவைக்கும் சென்னை, சிங்கார சென்னை என்று மக்களால் கொண்டாடப்படும் சென்னை கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு,1996 ஜூலை 17 மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றம் பெற்றது. தொடர்ந்து சென்னையின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் 2004 ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை” என தெரிவித்துள்ளார்.