"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்" - அமைச்சரின் கருத்துக்கு குவியும் வரவேற்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ள நிலையில் எத்தனை பேருக்கு அர்ச்சகராகும் வாய்ப்பு கிடைக்கும் பார்க்கலாம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களின் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களில் ஆறு பாடசாலைகள் அமைக்கப்பட்டு அனைத்து சமூகப் பிரிவினரையும் கொண்ட 240 மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் முறைப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் 240 பேர் ஒன்றரை வருட பயிற்சியை முடித்தனர். இவர்களில் 207 பேர் தேர்ச்சி பெற்றனர். ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 202 பேர் பணிக்காக காத்திருந்தனர். இதில் 2 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டு, தற்போது 200 பேர் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர்.