
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கான விதிமுறைகளை அரசாணையாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
விளைநிலங்களை அங்கீகாரம் பெறாமல் வீட்டு மனைகளாக விற்பனை செய்வதால், விவசாய நிலம் குறைவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்தனர். இதையடுத்து, கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பத்திரப் பதிவு பெரிதும் குறைந்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே மனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டவை மற்றும் மனைகளை வைத்திருக்கும் தனிநபர்கள் அவற்றை விற்பனை செய்வதில் ஏற்படும் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் அரசு சார்பில் முறையிடப்பட்டது. இவற்றை வரன்முறைப்படுத்த புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்வதற்கான விதிமுறைகளை தயாரித்து தமிழக அமைச்சரவை அதற்கு கடந்த 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அந்த விதிமுறைகளுக்கான அரசாணை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.