“கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநில பிரச்னையல்ல”- நீதிபதிகள் வேதனை

“கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநில பிரச்னையல்ல”- நீதிபதிகள் வேதனை
“கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநில பிரச்னையல்ல”- நீதிபதிகள் வேதனை

மதுரை நாகனகுளத்தைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,“தமிழகத்தில் சட்ட விரோத கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் 1 காவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இந்திய ஆயுத தடைச் சட்டத்தின்படி முறையான உரிமம் பெற்றவர்களே துப்பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக கள்ளத்துப்பாக்கி புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலேயே கள்ளத்துப்பாக்கி வழக்கம் அதிகமிருந்த  நிலையில், தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.  

அதிலும் வடமாநிலங்களிலிருந்து ரயில் மற்றும் பேருந்துகளில் கள்ளத்துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டு சில அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும்,அமைதிக்கும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன.

ஆகவே,இவற்றை முடிவுக்கு கொண்டுவர சட்ட விரோத, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வுப் முகமைக்கு மாற்றவும், அது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர், தேசியப் புலனாய்வு பிரிவு, சிபிஐ தரப்பில் எவ்வித பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகள், “தேசத்தின் அமைதியைக் குலைக்க பல அமைப்புகள் முயன்று வரும் நிலையில், கள்ளத்துப்பாக்கி எனது ஒரு மாநிலத்திற்கான பிரச்சனை அல்ல. இந்திய தேசத்திற்கான பிரச்சனை. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர், தேசிய புலனாய்வு பிரிவு, சிபிஐ தரப்பில் பதிலளிக்காதது வருத்தமளிக்கிறது. ஆகவே முக்கியத்துவம் கருதி இந்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். தவறினால் தொடர்புடைய அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும்” எனக்கூறி வழக்கை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com