அதிமுக விவகாரம்: தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் கண்டனம்

அதிமுக விவகாரம்: தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் கண்டனம்
அதிமுக விவகாரம்: தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் கண்டனம்

அதிமுக பொதுக்குழு மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை ஒரே அமர்வில் பட்டியலிடும்படி கடிதம் கொடுத்த மனுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் மற்றும் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியும், கிளைச் செயலாளர் தணிகாசலம் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும்  ஜூன் 23-ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த உரிமையல் வழக்கில் இடைக்கால உத்தரவு தேதி ஏதும் இல்லாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜூலை 11ல் நடத்தப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் விசாரணையில் உள்ளது.

இந்த நான்கு வழக்குகளும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மனுதாரர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே சி பழனிசாமி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் ஒரு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக தேர்தல், நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் குறித்த வழக்குகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நிலையில், இந்த வழக்குகளை வெவ்வேறு நீதிபதிகள் விசாரிப்பதற்கு பதிலாக ஒரே நீதிபதி முன்பு விசாரிக்க வேண்டும் எனவும், அதற்காக தனியாக ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டுமெனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராம்குமார் மற்றும் சுரேன் ஆகியோரின் வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளதாக தெரிவிக்கபட்டது.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கபட்டு வரும் நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா என்றும், தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் அதிமுக தொடர்பான நான்கு வழக்குகளையும் செப்டம்பர் 9ம் தேதி பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com