கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் இப்போதும் கூட தீண்டாமையா? - நீதிபதி வேதனை

கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் இப்போதும் கூட தீண்டாமையா? - நீதிபதி வேதனை

கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் இப்போதும் கூட தீண்டாமையா? - நீதிபதி வேதனை
Published on

கொடைக்கானல் கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்புத்தூரில் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த 2003இல் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்து திரும்பிய அருந்ததியர் பெண்கள் சங்கத் தலைவர் ஜோதி உட்பட 40 பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக ஜோதி அளித்த புகாரின் பேரில் ஞானம், பாண்டி உட்பட 17 பேர் மீது கொடைக்கானல் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 17 பேரையும் விடுவித்து 2011-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி ஜோதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சரியாக ஒத்துழைப்பு வழங்காததால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் 12 பேர் டிசம்பர் 29-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும் 12 பேரும் ஒரு வாரம் சிறையில் இருந்துள்ளதால், அந்த தண்டனையே போதுமானது என நீதிபதி உத்தரவிட்டார். இன்று இந்த வழக்கின் விசாரணைக்கு இரு தரப்பினரும் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்போது மனுதாரர் தரப்பிடம் இப்போது தண்ணீர் எப்படி கிடைக்கிறது? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி இப்போது கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு தற்போதும் தண்ணீர் எடுக்க மறுப்பு தெரிவிக்கப்படுவதாகவும், அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நீதிபதி, “இயற்கை வளம் அனைவருக்கும் பொதுவானது. அதனை பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில், தேவைகளை பகிர்ந்து பூர்த்தி செய்து அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து பிரச்சனைகளையும் தொடக்க நிலையில் சரி செய்தால் அடுத்த நிலைக்கு செல்லாது. இது போன்ற பிரச்சனைகள் தொடர காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் தான் காரணம். சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பின்னரும் இதுபோன்ற தீண்டாமை தொடர்வது வேதனையளிக்கிறது” என்று கூறினார். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் கோட்டாட்சியர், கொடைக்கானல் வட்டாட்சியர் ஆகியோர் திங்கள் கிழமை நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com