தென்காசி: கண் பார்வையற்ற மூதாட்டியை மருத்துவமனையில் தவிக்க விட்டுச்சென்ற உறவினர்கள்

தென்காசி: கண் பார்வையற்ற மூதாட்டியை மருத்துவமனையில் தவிக்க விட்டுச்சென்ற உறவினர்கள்
தென்காசி: கண் பார்வையற்ற மூதாட்டியை மருத்துவமனையில் தவிக்க விட்டுச்சென்ற உறவினர்கள்

இரண்டு கண்களிலும் பார்வை இழந்த மூதாட்டியை சிகிச்சைக்கு எனக்கூறி மாவட்டம் விட்டு மாவட்டம் அழைத்து சென்று மருத்துவமனையிலேயே உறவினர்கள் சொல்லிக்கொள்ளாமல் விட்டுச் சென்ற நிகழ்வு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 62). முத்தம்மாளின் கணவர் ஆறுமுகம் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. கணவரை இழந்த முத்தம்மாள், தன் மாமா மகளின் வீட்டில் தங்கி இருந்து புளியங்குடியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் அருகருகே வீடுகளில் கிடைக்கும் சிறுசிறு வேலைகளையும் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தையும் வீட்டில் இருக்கும் மாமா மகளிடம் கொடுத்து சேர்த்து வைத்துள்ளார்.  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மாமா மகளின் துணையுடன் நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கண் ஆபரேஷன் செய்துள்ளார். ஆனால் கண் பார்வையில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முத்தம்மாளுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை குறை ஏற்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து நெல்லையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இரண்டு கண்ணிலும் பார்வை குறைபாடுடன் முத்தம்மாளை உறவினர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக உடன் வந்த உறவினர், கண் மருத்துவமனையிலேயே இரண்டு கண்ணும் தெரியாத  
முத்தம்மாளை விட்டு விட்டு சென்று விட்டார். கணவர் இறந்து 10 வருடங்களாக கைக்கொடுத்து வந்த உறவு திடீரென கைவிட்டு போனதையும் வந்த இடத்தில் எங்கு செல்வது என்ற அறியாமையிலும் அச்சத்திலும் இரண்டு கண்களும் தெரியாத சூழலில் திக்கு திசை தெரியாமல் அலைந்து கீழே விழுந்துள்ளார். மிகவும் குழப்பம் ஏற்பட்டு கத்த தொடங்கி விட்டார். இதனைத் தொடர்ந்து தகவல் மாவட்ட ஆட்சியருக்கு செல்ல அவர் ஆதரவற்ற முகாம் நடத்திவரும் சோயா தொண்டு நிறுவனத்தின் சரவணனை தொடர்பு கொண்டு உள்ளார். தன்னார்வலர் சரவணன், பாதிப்புக்குள்ளான மூதாட்டியை அழைத்துக்கொண்டு மீண்டும் அதே கண் மருத்துவமனையில் முழு பரிசோதனைை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியை சந்தித்துள்ளார். மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மூதாட்டி முத்தம்மாளிடம் நலம் விசாரித்து அவருக்கு வேண்டிய உதவிகளை பெற்றுத் தருவதாகக் கூறினார். மேலும் தன் பணத்தை இத்தனை வருடங்களாக வாங்கிக்கொண்டு எனக்கான கண் சிகிச்சையின் போது உதவி செய்யாத உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தம்மாள் கோரிக்கை விடுக்க, சம்பந்தப்பட்ட தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் இது குறித்து ஒரு புகார் அளித்து விடுங்கள் என்றும் முதியோர் உதவித் தொகை கிடைப்பதற்கு அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் எனவும் ஆணையர் உறுதி அளித்ததும் மிகவும் நம்பிக்கையுடன் தன்னார்வலர் சரவணன் கைப்பிடித்து எழுந்து நடந்து சென்றார் மூதாட்டி முத்தம்மாள்.

இதனையடுத்து முத்தும்மாளை புளியங்குடிக்கு அழைத்து சென்ற தன்னார்வலர் சரவணன், அவரது உறவினர் பணம் வாங்கிக் கொண்டு தரவில்லை என்பதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இரண்டு கண் பார்வைகளும் தெரியாத நிலையில் இருக்கும் முத்தமாலை மாற்று திறனாளிகளுக்கான காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சரவணன் கூறும்போது, உங்கள் உறவினர்கள் உங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் அல்லது தெருவில் நீங்கள் காணும் ஆதரவற்றவர்கள் யாராக இருந்தாலும் அப்படியே விட்டு விட்டு செல்லாதீர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுங்கள் அல்லது எங்களைப் போன்ற தன்னார்வலர்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்கிறோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் தெருவில் தனியாக விட்டுச் செல்ல நினைக்காதீர்கள் என மனவேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com