மதுரை: திமுக கொடி கட்டப்பட்ட காரில் ஆவின் பால் பொருட்கள் சென்றதாக சர்ச்சை

மதுரை: திமுக கொடி கட்டப்பட்ட காரில் ஆவின் பால் பொருட்கள் சென்றதாக சர்ச்சை
மதுரை: திமுக கொடி கட்டப்பட்ட காரில் ஆவின் பால் பொருட்கள் சென்றதாக சர்ச்சை

மதுரை ஆவின் பால் பண்ணையில் திமுக கட்சி கொடி கட்டிய வாகனத்தில் பால் பொருட்கள் ஏற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சாத்தாமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது அந்த முறைகேடுகள் தொடர்பாக புகார் எழுந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமுக கொடிகட்டிய ஆடம்பர கார் ஒன்றில் ஏராளமான பால் பொருட்கள் ஏற்றிச்செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தில் பால் பொருட்கள் ஏற்றப்பட்டால் அதற்கான பில்களை வாசலில் உள்ள காவலாளி சோதனையிட்ட பின்னரே அனுமதிக்க வேண்டும் என்ற விதியை மீறி திமுக கொடியுடன் வந்த காரில் பால் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையிலும் எந்தவித சோதனையும் இன்றி  கார் வெளியே புறப்பட்டு செல்லும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் பொன்னுச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தீபாவளி சமயத்தில் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு 1.5டன் இனிப்புகளை எடுத்துச் சென்றதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் மதுரை ஆவின் பால் பண்ணைக்கு திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்த நபர்கள் அங்கிருந்து ஆவின் தயிர், ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.

ஆனால் அந்த சொகுசு காரில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆவின் பால் பொருட்களுக்கு முறையாக பணம் செலுத்தப்பட்டதா? பணம் செலுத்தியதற்கான பில் வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு பில் வழங்கியிருந்தால் அதில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் மட்டுமே காரில் ஏற்றப்பட்டுள்ளதா? என்பதை பால் பண்ணையின் நுழைவாயிலில் இருந்த காவலாளி வாகனத்தை பரிசோதனை செய்யாமல் ஏன் அனுப்பியுள்ளார்.?

அப்படியானால்  மதுரை ஆவின் பால் பண்ணைக்கு திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்து ஆவின் பால் பொருட்களை ஏற்றிச் சென்ற மர்ம நபர் யார்? மதுரை ஆவினில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அமைச்சர் நாசர் அவர்களும், ஆவின் நிர்வாக இயக்குனரும் முறையாக விளக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: நண்பனின் செல்போனில் பார்த்த அதிர்ச்சி வீடியோக்கள் - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com