
கடலூர் மாவட்டம் சிதம்பரம் விழல் கட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிகை அலங்கார தொழிலாளியான பன்னீர்செல்வம். 21 ஆண்டுகளாக சிதம்பரம் பகுதியில் சிகை அலங்கார தொழில் செய்து வந்துள்ளார். திருமணம் ஆகி வேம்புலதா என்ற மனைவியும் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுகள் அதிகரித்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பன்னீர்செல்வம் மலேசியாவில் சிகை அலங்கார பணிக்காக சென்றார்.
சிதம்பரத்தை பூர்விமாகக் கொண்டு மலேசியாவில் சிகை அலங்கார தொழில் செய்து வரும் ஜெயபாண்டியன் என்பவரின் மூலம் மாதம் 80 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்ற அடிப்படையில் பணிக்குச் சென்ற பன்னீர் செல்வதற்கு அங்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் மட்டுமே வழங்கிய நிலையில் அந்த சொற்ப தொகையும் பன்னீர் செல்வத்தின் அடிப்படை செலவுகளுக்கு போதாத நிலை ஏற்பட்டது. இதனால் வெளிநாட்டிற்கு வந்தும் குடும்பத்திற்காக எந்த தொகையும் அனுப்ப முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு பன்னீர்செல்வம் ஆளானார். தன் கணவனின் நிலை அறிந்த மனைவி வேம்புலதா வீட்டு வேலைகளுக்கு சென்று தங்களது குழந்தைகளை படிக்க வைத்து சமாளித்து வந்தார்.
இந்நிலையில், பணிக்காக அழைத்துச் சென்ற ஜெயபாண்டியனிடம், ”ஏன்? உரிய ஊதியம் வழங்கவில்லை” என்று வேம்புலதா போன் செய்து பேசியதனால் ஆத்திரமடைந்த அவர் பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.மேலும் அவரது விசாவை நீடிக்காமலும், பாஸ்போர்ட்டை மறைத்து வைத்தும் அவரை மிகுந்த கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் (புகாரின்படி). இதனால் பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் தன்னை எப்படியாவது இங்கிருந்து மீட்க வேண்டும் என மனைவிக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வேம்புலதா தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தார்.அதனை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின் பேரில் 5 ஆண்டுகளாக ஜெயபாண்டியனிடம் சிக்கித் தவித்த பன்னீர்செல்வம் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
அவரை மீட்டு அவருக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை இந்திய தூதரகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக அரசு செய்து வருகிறது. இந்நிலையில் விசாவை புதுப்பிக்காதது, பாஸ்போர்ட் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விதிக்கப்பட்ட அபராத தொகைகளை செலுத்த முடியாததால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் பன்னீர்செல்வம் மலேசியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திலேயே தங்கி உள்ளார்.
குடும்பத்தை காப்பாற்ற அன்றாடம் வீட்டு வேலைகள் செய்து மூன்று பிள்ளைகளின் படிப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வரும் அவரது மனைவி வேம்பு உள்ள நிலையில் தனது குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு கூட முழுமையாக வழங்கப்பட முடியவில்லை என்ற வேதனை தெரிவிக்கின்றார்.
வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் 3 பிள்ளைகளின் கல்வி, உணவு மற்றும் அடிப்படை தேவைகளை தன்னால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அபராத தொகையை எப்படி செலுத்த முடியும்” என்று வேதனை தெரிவிக்கிறார்.
எனவே தமிழக அரசு தலையிட்டு தனது கணவரை மீட்டு தரவேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.