கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்கள் மீது புகாரளிக்க வசதி கோரி மனு 

கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்கள் மீது புகாரளிக்க வசதி கோரி மனு 
கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்கள் மீது புகாரளிக்க வசதி கோரி மனு 
ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்களுக்கு எதிராகப் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சந்திக்காத ஒரு நெருக்கடியை  உலகம் சந்தித்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிப் போய் உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும் நோய்த் தொற்று மிக அதிகமாகப் பரவி வருகிறது.
இதனிடையே கொரோனா பாதிப்பு குறித்து நாள்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நாள்தோறும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.  இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
தற்சமயம் வரும் 14  ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதனைத் திரும்பப் பெற்றால் நோய்த் தொற்று அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அதன் மூலம் கொரோனா அடுத்த நிலையான சமூக தொற்று என்ற கட்டத்திற்குச் சென்றுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே நாட்டில் இன்னும் சமுதாயப் பரவல் ஏற்படவில்லை என்றும் அதனால் பீதியடையத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த நோயின் தீவிரம் தெரியாமல் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பலரும் வெளியில் மிகச் சாதாரணமாக நடமாடிக் கொண்டுள்ளனர். காவல்துறையினரும் அதனைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நாடகம் போட்டு விளக்குவது, பாடல்கள் பாடி விளக்குவது, காணொளி காட்சிகள் மூலம் விளக்குவது, பல்வேறு நூதனமான தண்டனைகள் மூலம் விளக்குவது எனப் போராடி வருகின்றனர். சில இடங்களில் காவல்துறை பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்து வருகிறது. அதனை எதிர்த்து சில சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ஆஃப்ரின் மனித உரிமை ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், ஊரடங்கை மீறும் மக்களிடம் காவல்துறையினர் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்களுக்கு எதிராகப் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவாத வகையில், காவலர்களுக்கு உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் தமிழக டிஜிபி பதிலளிக்க ஆணையத்தின் பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com