துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் தியாகத்தை வரலாறு பேசும் - நடிகர் கார்த்தி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் " எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன். சுற்றுச்சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.