சிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
15 வயது சிறுமியின் வயிற்றில் உருவான கருவை கலைக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
திருச்சி வலசை ரமணியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஓன்றை தாக்கல் செய்துயிருந்தார். அதில் நானும், எனது கணவரும் கூலி வேலைக்கு செல்கிறோம். எனது மூத்த மகளுக்கு 15 வயது. அவள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் அவரை அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் பலத்காரம் செய்தார். இதனால் என் மகள் கர்ப்பமடைந்தார். நாங்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்த போது என் மகள் வயிற்றில் 3 மாதக் கரு வளர்வது தெரியவந்தது. தற்போது பள்ளி செல்லும் பருவத்தில் 15 வயதில் கர்ப்பத்தை சுமக்கும் என் மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவளது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்தவெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி அரசு மருத்துவமனை டீன், மகப்பேறு மருத்துவ பிரிவு டீன் ஆகியோர் நேரில் ஆஜராகி, மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1997-ன் கீழ் 20 வாரத்துக்கு குறைந்த கருவாக இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்று கலைக்க முடியும். நாங்கள் சிறுமியை 26.6.2018-ல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது வயிற்றில் 11 முதல் 12 வார கரு வளர்வது தெரியவந்தது. 23.8.2018-ல் அந்தக் கரு 20 வாரத்தை தொடும். அதற்குள் கலைக்க வேண்டும். கர்ப்பத்தை தொடர்வதால் அந்தச் சிறுமியின் உடல் நிலையும், மனநிலையும் பாதிக்கப்படும் எனவே உடனடியாக கலைத்தால் கருவை பாதுகாப்பாக கலைக்க முடியும் என கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் வயிற்றில் உருவான கரு பலாத்காரத்தால் உருவானது. அவரது விருப்பத்துக்கு மாறாக நிகழ்ந்த ஒன்று. இதனால் சிறுமியின் மனநிலை பாதிக்கப்படும். இதனால் 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கலாம் என நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் இதற்காக சிறுமியை போலீஸார் திருச்சி அரசு மகத்மா காந்தி மருத்துவமனையில் ஆகஸ்ட் 16ல் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நீதிபதி, இன்றே கருவைக் கலைக்க டீன் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கருக் கலைப்புக்கு பிறகு மரபணு பரிசோதனைக்காக சிறுமி மற்றும் கருவின் ரத்த மாதிரியை சேகரிக்க வேண்டும். அந்த ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என்றார். அதுமட்டுமின்றி கருக் கலைக்கப்பட்ட பிறகு சிறுமி குணமடையும் வரை மருத்துவமனையில் தங்க வைத்து தேவையான சிகிச்சை அளிக்கவும், பின்னர் சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.