“குற்ற செயல்கள் அதிகரிக்க குடிபோதைதான் காரணம்” - உயர்நீதிமன்றம்

“குற்ற செயல்கள் அதிகரிக்க குடிபோதைதான் காரணம்” - உயர்நீதிமன்றம்

“குற்ற செயல்கள் அதிகரிக்க குடிபோதைதான் காரணம்” - உயர்நீதிமன்றம்
Published on

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி வீராசாமி உள்ளிட்ட இருவர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு வந்தபோது, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

மேலும் அந்த உத்தரவில், தமிழகத்தில் சொந்த மக்களுக்கு மதுபான விற்பனையை மாநில அரசே நடத்தி அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் 31,750 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதும், மாநில பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பதும் துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்தார். 

இதுதவிர தேசிய சுகாதார பணிகள் துறை ஆய்வுபடி, 47% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலான விபத்துக்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரித்து வருவதற்கு குடிபோதைதான் காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மது கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வராவிட்டால், இதுபோன்ற குற்றசம்பவங்கள் அதிகரிக்கவே செய்யும் என எச்சரித்துள்ளார். 

மேலும் மது போதையில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்தக் குற்ற சம்பவங்களுக்கு மதுவை விற்கும் தமிழக அரசை பொறுப்பாக்க வேண்டும் எனவும், குற்ற சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன், அபராதமும் விதிக்க முடியும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று அரசை பொறுப்பாக்குவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com