“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்
இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய ஹெல்மெட் அணியாதது மட்டுமல்ல, மோசமான சாலைகளும் காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சாலை விபத்து உயிரிழப்புகள் குறித்து, காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி சாம்சன் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் 25 சதவிகிதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழப்பதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல என கூறினர்.
மேலும் சாலையின் தரமும், முறையாக பராமரிக்காததுமே சாலை விபத்து உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாக பராமரிப்பது குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.