புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காதலியைக் கொன்றுவிட்டு, நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.
சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான மோகன் என்பவரும் கடந்த பத்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள தைலமரக் காட்டில் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்தார். அருகிலேயே மோகன் காயங்களுடன் இருந்தார்.
இரவு நேரத்தில் மகாலட்சுமி உடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த மர்மநபர்கள் இருவரையும் கட்டையால் தாக்கியதாகவும், அதில் மகாலட்சுமி உயிரிழந்துவிட்டதாகவும் மோகன் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து காயங்களுடன் இருந்த மோகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் மோகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த தாம், அருகில் இருந்த கட்டையால் தாக்கியதில் மகாலட்சுமி உயிரிழந்துவிட்டதாகவும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நாடகமாடியதாகவும் மோகன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனையில் வைத்தே அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.