திருமண விழாவில் மணமகளை ‘பளார்’ என அறைவிட்ட மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகளின் தந்தை
திருமணம் என்றாலே அதில் ஆட்டம், பாட்டம் எல்லாம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அப்படியொரு மணவிழா தமிழ்நாட்டின் பண்ருட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது. பண்ருட்டியில் சொந்தமாக தொழில் செய்து வரும் நபரின் மகளுக்கும், காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
வியாழன் அன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதனால் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த திருமண விழாவின் வரவேற்பு நிகழ்வில் மணமகள் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடியபடி திருமண மண்டபத்திற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதை கண்டு மணமகன் விரக்தி அடைந்துள்ளார். அதோடு அது தொடர்பாக மணமகளிடம் கேட்ட அவர், மணமகளை ‘பளார்’ என அறைந்துள்ளார். உடனடியாக மணமகளும் பதிலுக்கு அவரை திரும்ப அறைந்துள்ளார். தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை கவனித்த மணமகளின் தந்தை “திருமணத்திற்கு முன்னவே எனது மகளை திட்டி, அடிக்கிறாய். திருமணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என சொல்லி மணமகனிடம் நியாயம் கேட்டுள்ளார். பின்னர் உறவினர்களுடன் கூடி பேசிய அவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உடனடியாக செஞ்சியை சேர்ந்த தங்களது நெருங்கிய உறவுக்காரரின் மகனை தனது மகளுக்கு அவர் திருவதிகை கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது.