“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி !
பென்னாகரம் அருகே வங்கியில் கல்வி கடன் பெற்று படித்த பட்டாதாரி வங்கியில் படித்த சான்றிதழை ஒப்படைப்பதாக வங்கி முன் துண்டறிக்கை ஒட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்தலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் சுரேந்திரன் கடந்த 2010-11 கல்வியாண்டில், பட்டம் முடித்து, கல்வியியல் (பிஎட்) படித்துள்ளார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் இவர், படிப்பதற்கு வங்கி கடன் கேட்டு, ஏரியூரில் உள்ள வங்கியில் விண்ணப்பித்துள்ளார். அந்த வங்கியும் சுரேந்திரனின் படிப்பிற்கு கல்வி கடனாக ரூ.35,000 வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, சுரேந்திரன் தனது மேற்படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கல்வி கடன் வழங்கிய வங்கியில் இருந்து, பணம் கட்டச் சொல்லி, வழக்கரிஞர் மூலம் பட்டதாரி சுரேந்திரனுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொண்ட பட்டதாரி, வங்கிக்கு நேரில் சென்று, தற்பொழுது வேலை இல்லை. பிறகு வாய்ப்பு கிடைக்கும் போது, கட்டுவதாக சொல்லி கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வங்கி மூலம் வழக்கரிஞர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கல்வி கடன் தொகை கட்டத்தவறினால், சொத்தகளை பறிமுதல் செய்வதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பட்டதாரி சுரேந்திரன், தனக்கு போதிய வருவாய் இல்லை. அதனால், நான் பணம் திருப்பி செலுத்தும் வரை தன்னுடைய அசல் சான்றிதழ்களை வங்கியில் வைத்துக் கொள்ளவும், எனக்கு சொத்தே இந்த கல்வி சான்றிதழ்கள் தான். அதனால் இவற்றை வங்கியில் ஒப்படைக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் வங்கி நுழைவாயில் துண்டறிக்கை ஒன்றையும் ஒட்டியுள்ளார். இச்சம்பவம் ஏரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.