”ஆளுநர் வெளியேறியது அநாகரிகமானது” - கண்டன குரல்களை பதிவு செய்த அரசியல் கட்சிகள்

”ஆளுநர் வெளியேறியது அநாகரிகமானது” - கண்டன குரல்களை பதிவு செய்த அரசியல் கட்சிகள்
”ஆளுநர் வெளியேறியது அநாகரிகமானது” - கண்டன குரல்களை பதிவு செய்த அரசியல் கட்சிகள்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்குள் வந்தவுடன் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும், சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமலும் செயல்படும் ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்காக அரசு தயாரித்த ஆங்கில பதிப்பில் இருந்த பல வார்த்தைகளை ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்திருந்தார். இதற்கு சட்டப்பேரவையிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை அப்படியே வாசிப்பதுதான் மரபு. ஆனால் ஆளுநர் அந்த மரபை மீறி செயல்பட்டிருக்கிறார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், தலைமைச் செயலகத்தின் வாயிலில் நின்றபடி ஆளுநருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் நடைபெறும் தற்கொலைகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆளுநர் ஆர்.என்.ரவியை போல இதுவரை எந்த ஆளுநரையும் பார்த்ததில்லை. வேண்டுமென்றே திராவிடம் என்ற வார்த்தைகளை தவிர்த்து ஆளுநர் உரையாற்றியதாக குற்றம்சாட்டினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நேர் எதிர் செயல்பாடுகளில் ஆளுநர் செயல்படுவதால் அவரது உரையை புறக்கணித்ததாக தெரிவித்தார்.

விசிக சட்டமன்ற தலைவர் சிந்தனைச் செல்வன் பேசுகையில், ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் பாஜக கொள்கைகளை புகுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

அதே போல மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி முதலிய கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பி, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையின் முதல்நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழக அரசு சார்பில் உரிய அழைப்பிதழ் வழங்கப்பட்டு உரையும் ஒப்புதல் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. நடைமுறைகளுக்கு மாறாகவும், அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு மாறாகவும், உரையை வாசித்திருப்பது வருத்தமளிக்கிறது. முதலில் ஆளுநருக்கு உரிய மரியாதை அளித்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோம், ஆனாலும் சமூகநீதி, சமத்துவம், பெண்ணடிமை உள்ளிட்ட வார்த்தைகளை அவர் பேச மறுத்துவிட்டார். சனாதான கொள்கைகளை சட்டப்பேரவைக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஆளுநரோடு அதிமுகவும் தேசிய கீதத்தை புறக்கணித்தது அவமானமானது. அண்ணா, பெரியார் பெயர்களை உச்சரிக்க மாட்டேன் என கூறிய ஆளுநரை கண்டிக்காமல், அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளது போல அதிமுகவும் தேசிய கீதம் இசைக்கும் முன்னே வெளியேறியது என தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com