”பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்; கோட்டையை நோக்கி போராடுவோம்” - வேல்முருகன் ஆவேச பேச்சு

”பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்; கோட்டையை நோக்கி போராடுவோம்” - வேல்முருகன் ஆவேச பேச்சு
”பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்; கோட்டையை நோக்கி போராடுவோம்” - வேல்முருகன் ஆவேச பேச்சு

'பசுமையை அழித்து பசுமை விமான நிலையம் அமைப்பதா’ எனக் கூறி பரந்தூர் கிராம மக்கள் 200 வது நாளாக போராடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒருபோதும் அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள், பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதிய விமான நிலையம் அமைக்க கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்டமாக நான்கு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் படாளம், திருப்போரூர். காஞ்சிபுரம் பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில், இரண்டு இடங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரந்தூரை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு தேர்வு செய்தது.

இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 500 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு 700 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என்று பரந்தூர், ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் கடந்த 199 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று 200ஆவது நாள் போராட்டத்தை நடத்தினர்.

இதையடுத்து இன்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். முன்னதாக விழா மேடைக்கு வேல்முருகன் வந்த போது அவரின் காலில் விழுந்த மூதாட்டி ஒருவர் எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என்று கதறி அழுதார்.

இதைத் தொடர்ந்து விழா மேடையில் வேல் முருகன் பேசியபோது...

”நான் 13 கிராம மக்களையும் பார்க்கக் கூடாதென்று என்னை 7 இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஒரு வழக்கறிஞருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. பூவுலகின் நண்பர்கள் இயக்க வழக்கறிஞர் வெற்றிச் செல்வனை கைது செய்தது கண்டனத்திற்குரியது. உங்கள் குடும்பத்தில் இருப்பவரை கைது செய்தது நியாயமா?. அதிகாரவர்க்கத்தின் காரணமாக இந்த அரசு பல விஷயங்களை மாற்றி முடிவு எடுக்கிறது. எங்கள் பங்காளி அமைச்சர் துரைமுருகனுக்கு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளது. 100 ஜெயின், 100 மார்வாடி வீடு இருந்தால் இந்த திட்டத்தை கொண்டு வருவார்களா?.

திமுக அரசு சிந்தித்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்றால் இங்கு வாழ நாங்கள் வெட்கப்படுகிறோம். ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தான் ஜனநாயக வாதிகள் அவர்கள் எடுக்கும் முடிவை தான் அரசு கேட்கும். மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்ற பின் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.

நெய்வேலியில் உள்ள மக்களுக்கு வேலைதராமல் மோடி அரசு போட்டது மொட்டை நாமத்தை. தேர்தலின் போது திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறீர்கள். உங்களது இரட்டை நிலைப்பாடு தெரிய வருகிறது. இந்திய அரசுக்கு என்று ஒரு விமானம் கூட இல்லை. அத்தனையும் டாட்டாவிற்கு விற்று விட்டார்கள், உங்களுக்கு எதற்கு விமான நிலையம் 5000 ஏக்கரையும் டாடவிற்கும், அதானிக்கும் தான் இவர்கள் கொடுப்பார்கள். பெரும் முதலாளிகள், பெரும் அரசியல்வாதிகளும் தான் 1000 ஏக்கரில் நிலத்தை வாங்கி வைத்து உள்ளார்கள்.

இன்று காலில் விழும் இவர்கள், காலில் இருக்கும் செருப்பை கழட்ட எவ்வளவு நேரமாகும். தமிழர்கள் நாங்கள்; எங்கள் கலாச்சாரம் செருப்பு விசுவதில்லை. ஒரு வன்முறை இங்கு நடந்ததா, ஒரு கல்லை இவர்கள் வீசி இருப்பார்களா?. பெண்கள் ஓதுங்க கழிப்பிடம் இல்லை. கேட்டால் டிஜிட்டல் இந்தியா என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாடு வேலை தமிழனுக்கே என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அவர்களுக்கே வேலையை உறுதி செய்ய வேண்டும் என நீண்ட காலமாக நாம் கோரிக்கை வைத்து வருகிறோம். நேரடியாக தமிழக அரசு வேலை, தமிழர்களுக்கு என்று சொல்லாமல் சுற்றி வளைத்து தமிழ் பாடத்தில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் எனக் கூறி சட்டம் இயற்ற முன்வந்துள்ளனர். இங்கு நான் முதலமைச்சரை திட்டுவதற்கு வரவில்லை, எப்படி கலைஞர், மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றினாரோ அதேபோல் நீங்களும் நான் வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்களா?, நீங்கள் இருக்கும் திசையை நோக்கி கைகூப்பி வணங்குகிறேன்.

இந்த இடத்தில் விமான நிலைய வேண்டாம். தமிழக அரசு அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மாற்று இடங்களை தேர்வு செய்யுங்கள். புதுவை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யுங்கள். அங்கே இருந்து வெளி நாட்டிற்கு மக்களை ஏற்றிச் செல்லுங்கள்.

தமிழக முதல்வருக்கு அரசு அதிகாரிகள் தவறான செய்தியை தருகிறார்கள், இதை அவர்கள் திரும்ப பெறவில்லை என்றால், கோட்டையை நோக்கி போராட்டம் தொடரும், நாளை எங்கள் கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களுடன் இந்த மண்ணிற்கு வருவோம். நாளை கோட்டையை நோக்கி 7 செக் போஸ்ட் போடும் நிலைமையை உருவாக்கி விடாதீர்கள். ஒரு ஆளு வேல்முருகனை சமாளிக்க 4 எஸ்.பிக்கள் எதற்கு. பெரிய கட்சியை நாங்கள் சேர்த்து கொள்வதில்லை. அவர்கள் அடிக்கடி மன நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், நாங்கள் மக்களுக்காக நேர்ந்து விட்டவர்கள்" என்றார்.

இதையடுத்து செய்தியார்களிடம் பேசிய வேல்முருகன், ”200 ஆவது நாளாக விமான நிலையம் வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் நடக்கிறது. மத்திய அரசு சார்பில் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.

5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் வேண்டுமா? என்று முதல்வர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். ஏக்கருக்கு ஒரு கோடி பணம் மற்றும் மத்திய அரசு மாநில அரசு பணி வேண்டாம். நாங்கள் விவசாயம் செய்து இந்த மண்ணில் பிழைத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். மக்களை தூண்டி விடுவது என் நோக்கம் இல்லை. இருக்கும் விமான நிலையங்கயை பெரிது செய்யுங்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com