”தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்கிறது”: ஓபிஎஸ் விமர்சனம்
”தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்குவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலங்களான பீஹார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில்கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறும் 19 விழுக்காடு மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசியில் உள்ளது.
பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவது தமிழ்நாட்டில்தான் சுணக்கம் இருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.