கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் திறக்கப்பட்ட சொர்க்க வாசல் - பக்தர்கள் தரிசனம்

கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் திறக்கப்பட்ட சொர்க்க வாசல் - பக்தர்கள் தரிசனம்
கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் திறக்கப்பட்ட சொர்க்க வாசல் - பக்தர்கள் தரிசனம்

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்:
தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான (02-01-2023) இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து சொர்க்கவாசல் வழியாக வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என கோஷமிட்டவாறு பரமபதவாசலை கடந்து சென்றனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதர் ஆலயம், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடப்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பட்டாச்சாரியார்கள் பெருமாள் பாசுரங்களை பாடினர் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை:
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீரங்கத்திற்கு முந்தைய திவ்ய தேசமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் விளங்குகிறது. சிறப்பு மிக்க திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சியோடு தொடங்கியது.

முக்கிய நாளான இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சர்வ அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு சொர்க்க வாசலில் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி:
தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. சுவாமி பூக்களால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வணங்கி வழிபட்டனர். சொர்க வாசல் திறப்பில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது.

திருவண்ணாமலை:
செய்யாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ எத்திராஜ வள்ளி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேளதாள வாத்தியங்களுடன் சிறப்பு வானவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நாமக்கல்:
நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு பகுதியில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோயிலான அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை நடைப்பெற்றது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாக சாமியின் ஜடாரியை கூடையில் வைத்து கொண்டு வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்கள் எழுப்பி, சாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவள்ளூர்:
108 வைணவ ஸ்தலங்களில் 60-வது ஸ்தலமான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவ மூர்த்தியான வீரராகவ பெருமாளுக்கு தீப, தூபங்கள் ஆராதனை காட்டப்பட்டு பரம்பதம் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்னை,திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.'கோவிந்தா', 'கோவிந்தா' என்னும் நாமம் விண் அதிர எதிரொலித்தது.

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுச்சேரியில் 12 ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த புரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவித் தாயார் உடனுறை அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கும்போது கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஏராளமான பெண்கள் திருப்பாவையை பாடி பெருமாளை வழிபட்டனர்.

செஞ்சி:
செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அரங்கநாதர் ஆலயம். பல்லவர் கால குடவரை கோவிலாகும். இக்கோவிலில் ஏகாதசி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு மலை மீதுள்ள திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரங்கநாதர் உற்சவரானது கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பின்பு பக்தர்களுக்காக கோவில் அடி பிரகாரத்தில் வைத்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திருக்கோவிலுக்கு சென்று அரங்கநாதரை வழிபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com