விவசாயி வீட்டு வாசலில் படுத்துறங்கிய குள்ளநரி - அலட்சியம் காட்டிய வன அதிகாரிகள்
தண்ணீர் தேடி வீட்டிற்குள் நுழைந்த குள்ளநரியை மீட்க, வனத்துறையினர் வராததால் ஊர்மக்களே கொண்டுப்போய் காட்டில் விட்டனர்.
போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி கணக்குபிள்ளை கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை குள்ளநரி ஒன்று வந்தது. இன்று காலை 4 மணிக்கு முருகேசன், வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் வராந்தாவில் உள்ள மூட்டையின் மேல் குள்ளநரி ஒன்று படுத்துறங்கிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். வெளியே செல்ல பல வழிகள் இருந்தும் அது செல்லாமல் அங்கேயே படுத்துக்கொண்டது.
இதையடுத்து இந்தத் தகவல் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியவே அக்கம்பக்கத்தினர் கூட்டமாக வந்து குள்ளநரியைப் பார்த்துவிட்டு சென்றனர். சிலர் குள்ளநரியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நெடுநேரமாகியும் வனத்துறை வராததால் அவர்களே முட்டையில் கட்டி சென்றாயமலை காட்டில் கொண்டு போய் விட்டனர். தண்ணீரை தேடி வந்த குள்ளநரியை நாய்கள் சூழ்ந்துக்கொண்டதால் வேறு வழியின்று வீட்டிற்குள் புகுந்ததாக முருகேசன் தெரிவித்தார்.

